Friday, August 11, 2017

மலைநாட்டு திவ்யதேசப் பயணம் - பகுதி 1

மலைநாட்டு திவ்யதேசப் பயணம் - பகுதி 1

போகவேண்டும் என பல மாதங்களாக நினைத்திருந்த விஷயம் திடீரென்று கை கூடியது. சமீபத்தில், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸில் அதிகாலை செங்கணூர் ரயில் நிலையத்தில் இறங்கியபோது, மலையாள மண் ஏன் God's own country என்பது விளங்கியது. ஹோட்டல் செல்லும் வரை பசுமை வழியெங்கும் கூடவே வந்தது.  ஜூலை மாதக் கேரளாவின் அருமையான தட்பவெப்ப நிலை.

மலைநாட்டுத் திவ்யதேசங்கள் 13. அவற்றில் 2 (திருவண்பரிசாரம் - திருவாழ்மார்பன்/திருக்குறளப்பன், திருவட்டாறு - ஆதிகேசவப்பெருமாள்) தமிழகத்தில் உள்ளன. கேரளத்தில் உள்ள பதினொன்றில் செங்கணூருக்கு அருகில் ஆறு மலை நாட்டு திவ்யதேசங்கள் உள்ளன. நான் தரிசிக்கச் சென்றது இந்த 6-ஐத் தான். அவை, திருவல்லவாழ் (திருவள்ளா), திருக்கொடித்தானம் (செங்கணச்சேரி), திருவண்வண்டூர், திருவாறன்விளை (ஆரன்முலா), திருப்புலியூர் & திருச்சிற்றாறு(செங்கணூர்). 6 திவ்யதேசங்களும் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் பெற்றவை (திருவாய்மொழி வழி பாடல் பெற்றத் தலங்களாம்)

கோயில்களுக்குச் செல்ல ஒரு கார் ஏற்பாடு பண்ணியிருந்தேன். காரை ஓட்டிய டிரைவர் பெயர் ராஜேஷ். சேட்டனுக்கு தமிழ் சரியாக வராவிட்டாலும், புன்னகை அழகாக வந்தது. அதை விட முக்கியம், வண்டியை ஒழுங்காக ஓட்டினார். மேலே குறிப்பிட்ட 6 கோயில்களுக்கு செல்லும் வழியை விரல் நுனியில் வைத்து இருந்தார். ”புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது” பாடலை முழு வால்யூமில் வைத்து, கோயில் செல்வதற்கான என் மனநிலை துளியும் மாறாதவாறு பார்த்துக் கொண்டார்.  ஒரு வைணவ அடியாரான எனக்கு வேறென்ன வேண்டும்? முதல் கோயில் போய்ச் சேர்வதற்குள் தேங்காய் எண்ணெய், நேந்திரங்காய் சிப்ஸ் வாசனை மூக்கில் நுழைந்து ஒரு ஓரமாய் தங்கி விட்டது.

முதலில் சென்றது திருவல்லவாழ். மிகப்பழமையான இத்தலம் ஸ்ரீவல்லப சேத்திரம் என்று போற்றப்படுகிறது.  திருவாழ்மார்பன், ஸ்ரீவல்லபன், கோலப்பிரான் என்ற திருநாமங்கள் கொண்ட பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். தாயாருக்கு செல்வத் திருக்கொழுந்துநாச்சியார், வாத்சல்ய தேவி என திருநாமங்கள். பிராட்டியானவள் ”அகலகில்லேன் இறையுமென்று” என்று நம்மாழ்வார் அருளியபடி, பெருமாளின் திருமார்பிலேயே வீற்றிருந்து ஸ்ரீவல்லபனுக்கு அழகையும், வாத்சல்யத்தையும் கூட்டுகிறாள்! (நம்மாழ்வார் மட்டுமன்றி) திருமங்கை மன்னனும், பெரிய திருமொழி, பெரிய திருமடல் பாசுரங்களில் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார்.

கேரளாவில் வைணவக் கோயில்களில் குங்குமம், மஞ்சள் காப்பு தருவதில்லை. வாசமிகு (பிரவுன் கலர்) சந்தனப் பிரசாதம் தான். கமுகு இலையில் சாதமும், உப்புமாங்காயும் பெருமாளுக்கு அமுது செய்யப்படுகிறது. கருடாழ்வாருக்கு பெருமாள் நேரே சன்னிதி கிடையாது. உயரமான கல்தூணில் பறக்கும் நிலையில் தங்க கவசத்தோடு பெரியதிருவடி அருள் பாலிக்கிறார். திருவாழ்மார்பன் என்பதால், பெருமாளின் திருவடி தரிசனத்தை விட இவரது திறந்த மார்பின் தரிசனம் இங்கு சிறப்பானதாகக் கருதப்படுகிறது.


தங்கக் கவசத்துடன் உயரமான கொடிமரமும், மூன்றடுக்கு கருட மடமும் (படத்தில் காணலாம்) இத்தலத்திற்கு சிறப்பைச் சேர்க்கின்றன.


பொருசிறைப் புள் உவந்து ஏறும் பூமகளார் தனிக் கேள்வன்
அதாவது “அலைமோதும் சிறகுகளைக் கொண்ட கருடன் மீது மகிழ்ச்சியோடு வீற்றிருக்கும் திருமகளின் ஒப்பில்லாதா வல்லபன்” என்று ஆழ்வார் கருடாழ்வானை முன்னிட்டு அந்தப் பரந்தாமனைப் போற்றியிருப்பதை நினைவு கூர்கிறேன். கம்பத்தின் உச்சியில் ஒரு கரத்தை நெஞ்சுக்கு நேராக வைத்துக்கொண்டு, மற்றொரு கரத்தை கீழ் அமர்த்தியபடி, இரு சிறகுகளையும் விரித்துக் கொண்டு (பெருமாளைச் சுமந்தபடி) பறக்கத் தயாராக உள்ள கருடனின் சிலை அருமை.

கொடுமைகள் செய்து வந்த தோலாசுரன் என்ற அரக்கனை, ஒரு பிரம்மச்சாரியாக வந்து ஸ்ரீவல்லபப்பெருமாள் வதம் செய்தார் என்பது தல வரலாறு. அதனால், தோலாசுரனை அழித்த சுதர்சன சக்கரத்துக்கு ஒரு தனிச்சன்னதி உள்ளது. மார்கழி திருவாதிரை மற்றும் சித்திரை விஷு அன்று பெருமாளுடைய திருமார்பு தரிசனம் மிகவும் விசேஷம். அன்று, தோலாகாசுரனுடன் போரிட்ட காலத்தில், மான் தோலுடன் ஆன வேடன் கோலத்தில் பெருமாளைச் சேவிக்கலாம். இத்தலத்தில் கதகளி பூஜை விசேஷமானது ஆகும்.  குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் தினந்தோறும் கதகளி பூஜை செய்கின்றனர். அதற்காகவே  மண்டபம் ஒன்றைக் கட்டியுள்ளனர்.

மாசி மாத பிரம்மோற்சவத்தின் போது ஒன்பதாம் நாள் அன்று, தோலகாசுரனை ஸ்ரீவல்லபன் வதம் செய்ததைக் கொண்டாடும் வகையில் பள்ளி வேட்டை உத்சவமும், பத்தாம் நாள் பூச நட்சத்திரத்தன்று  குருதி தோய்ந்த  சுதர்சன சக்கரத்தைக் கழுவும் ஆராட்டு உத்சவமும்  சிறப்பாக நடைபெறுகின்றன.  வானமாமலை தெய்வனாயகப் பெருமாளிடமும், திருக்குடந்தை (கும்பகோணம்) ஆராவமுதனிடமும் பரமபதம் எனும் பெரும்பேற்றை வேண்டி சரணாகதி செய்த நம்மாழ்வார், அடுத்துச் சரணாகதி அடைந்தது திருவல்லவாழ் திருவாழ்மார்பனிடம் என்பதால், இத்திருத்தலம் மோட்சத்தலங்களில் மூன்றாவது ஆகும்,2 ஆழ்வார் பாசுரங்களை அனுபவிப்போம்.

நம்மாழ்வார் பராங்குச நாயகி பாவத்தில் அருளிய அழகிய பாசுரம் இது.

தொல்லருள் நல்வினையால் சொலக்கூடுங்கொல் தோழிமீர்காள்,
தொல்லருள் மண்ணும்விண்ணும் தொழநின்ற திருநகரம்,
நல்லருள் ஆயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ்,
நல்லருள் நம்பெருமான் நாராயணன் நாமங்களே! - திருவாய்மொழி


தோழியரே! வானோரும், பூவுலக மாந்தரும் போற்றி வணங்கி, கொண்டாடத்தக்க இயற்கைப் பேரரருள் மிக்கதும், கருணையிற் சிறந்த ஆயிரக்கணக்கான அடியவர்கள் நலத்துடன், அப்பரந்தாமனை இறைஞ்சி வாழ்கின்ற திருத்தலமும், ஆன திருவல்லவாழ் நகரில் நின்ற பேரரருளாளனும் நம் தலைவனும் ஆன நாராயணனின் திருநாமங்களை, அப்பரமனது பழம்பெரும் அருளால் விளைந்த புண்ணியத்தால், நாம் என்று ஓத நேருமோ !!?

திருமங்கையாழ்வார் பாசுரம் ஒன்று:

உருவினார் பிறவிசேர் ஊன்பொதி நரம்பு தோல் குரம்பை உள்புக்கு
அருவிநோய் செய்துநின்ற ஐவர்தாம் வாழ்வதற்கு அஞ்சினாயேல்
திருவினார் வேதநான்கும் ஐந்து தீவேள்வியோடு அங்கம் ஆறும்
மருவினார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே


நெஞ்சே! உருவத்தோடு கூடிய பிறவியெடுத்ததால், சதை பொதிந்த நரம்பும், தோலும் கூடிய உடற்கூட்டுக்குள் புகுந்து கொண்டு, உன்னைத் துன்புறுத்தி வேதனையளிக்கும் ஐம்புலன்களோடு சேர்ந்து வாழ்வதற்கு நீ அச்சமுற்றால்
ஞானச்செல்வமாகிய நான்கு வேதங்களும், ஐந்து அக்னிகளும், ஐவகை வேள்விகளும், வேதத்தின் ஆறு அங்கங்களும்(சிக்க்ஷை, கண்டம், நிருக்தம், வியாகரணம், கல்பம், ஜோதிஷம்) கற்றுணர்ந்து ஒழுகும் அடியவர் வாழ்கின்ற திருவல்லவாழ் பொருந்தி, அதைப் போற்றி வாழ்வாயாக!

திவ்வியக்கவி பிள்ளைப் பெருமாள் ஐய்யங்கார் தமது நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியில் கோலப்பிரானைப் பற்றி பாடியுள்ளார். மிக அழகான பாசுரம் அது.

உகந்தார்க்கு எஞ்ஞான்றும் உளன் ஆய், உகவாது
இகந்தார்க்கு எஞ்ஞான்றும் இலன் ஆய் – திகழ்ந்திட்டு,
அருஅல்ல, வாழ்உருவம் அல்ல, என நின்றான்
திருவல்லவாழ் உறையும் தே.


இத்தலத்திற்கான வடமொழி தியானத் தோத்திரம் விசேஷமானது:

ஸ்ரீவல்லப க்ஷேத்ரே பம்பா நதி தீரே கண்டாகர்ண புஷ்கரணி தடே, சதுரங்க கோல விமானச்சாயாயாம் ஸ்திதாய பூர்வாபிமுகாய ஸ்ரீமதே வாத்ஸல்யவல்லி, ப்ரேம வஸுபல்லவித வல்லி நாயிக சமேத சுந்தராய (கோலப்பிரான்) ஸ்ரீவல்லபாய பரப்ரஹ்மனே நமஹ!

தொடரும்........

--- எ.அ.பாலா

*******************************************************

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails